ஆபரேஷன் ராஹத்தின் கடைசி நாளில் மட்டும் சனாவில் இருந்து 630 பேர் மீட்புடெல்லி: ஆபரேஷன் ராஹத்தின் கடை நாள் அன்று மட்டும் ஏமனில் இருந்து 630 பேரை மீட்டு விமானம் மூலம் இந்தியா அழைத்து வந்ததாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏமனில் சிக்கித் தவித்த 4 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணிக்கு ஆபரேஷன் ராஹத் என்று பெயரிடப்பட்டது.

 

 

மீட்பு பணிகளை பார்வையிட வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே. சிங் ஏமனின் அண்டை நாடான ஜிபோத்தியில் முகாமிட்டிருந்தார். இந்நிலையில் இது குறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் செய்யது அக்பருத்தீன் கூறுகையில், ஏடன் துறைமுகத்தில் குண்டுவெடித்ததை அடுத்து ஏமனில் நிலைமை மேலும் மோசமாகியுள்ளது. சனா நகருக்கு அழைத்து வரப்பட்ட இந்தியர்கள் விமானங்கள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். சனாவில் உள்ள இந்திய தூதரகத்ததை மூடிவிட்டு அங்கிருக்கும் அதிகாரிகளை வேறு இடத்திற்கு அனுப்ப வேண்டும். மீட்பு பணியின் இறுதி நாள் அன்று மட்டும் சனாவில் இருந்து 630 பேரை விமானம் மூலம் மீட்டுள்ளோம். இதன் மூலம் சனாவில் இருந்து விமானம் மூலம் மீட்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 900 ஆக அதிகரித்துள்ளது. அவர்கள் 18 சிறப்பு விமானங்கள் மூலம் மீ்ட்கப்பட்டுள்ளனர். மார்ச் மாதம் 31ம் தேதி முதல் ஏடன், அல் ஹுதைதா மற்றும் அல் முகல்லா ஆகிய துறைமுகங்களில் இருந்து சுமார் 1, 670 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதுவரை 5 ஆயிரத்து 600 பேரை மீட்டுள்ளோம். அதில் 4 ஆயிரத்து 600 இந்தியர்கள், 41 நாடுகளைச் சேர்ந்த 960 வெளிநாட்டவர்கள் அடக்கம் என்றார்.